» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் உணவு பாதுகாப்பு தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது: பிரதமர் மோடி

சனி 3, ஆகஸ்ட் 2024 12:53:04 PM (IST)

உலகின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது என்று வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டு புதுடெல்லியில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "65 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவின் 12 கோடி விவசாயிகள், 3 கோடி பெண் விவசாயிகள், 3 கோடி மீனவர்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். தற்போது நீங்கள் 55 கோடி விலங்குகள் வாழும் ஒரு நாட்டில் இருக்கிறீர்கள். 

விவசாயம் ஆதிக்கம் செலுத்தும், விலங்குகளை நேசிக்கும் நாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உணவு மற்றும் விவசாயம் பற்றிய எங்கள் பாரம்பரியங்களும் அனுபவங்களும் எங்கள் நாட்டைப் போலவே பழமையானவை. இந்தியாவின் விவசாய பாரம்பரியத்தில், அறிவியலுக்கும் தர்க்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட உணவை உட்கொள்ளும் ஆயுர்வேத விஞ்ஞானம் எங்களிடம் உள்ளது. இது இந்திய சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன், 'கிருஷி பராசரர்' என்ற கிரந்தம் எழுதப்பட்டது. அது மனித வரலாற்றின் பாரம்பரியம்.

விவசாயத்தைப் பொருத்தவரை இந்தியாவில் இன்றும் நாங்கள் ஆறு பருவங்களை மனதில் வைத்துதான் திட்டமிடுகிறோம். எங்களிடம் 15 விவசாய காலநிலை மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்த சிறப்புகளைக் கொண்டுள்ளது. இங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் அங்கு விவசாயம் வேறுமாதிரி நடக்கும். இந்த பன்முகத்தன்மை இந்தியாவை உலகின் உணவுப் பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கீற்றை வழங்குகிறது.

இன்று இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடாக திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய பால், தானியங்கள், பருப்பு உற்பத்தியாளர்களாக நாங்கள் இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகின் கவலையாக இருந்தது. இன்று இந்தியா உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை ஊட்டச்சத்துக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இதற்கு இந்தியாவிடம் ஒரு தீர்வு உள்ளது. சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இன்று இந்தியா உள்ளது. இந்த சிறுதானியங்களை உலகம் சூப்பர்ஃபுட் என்று அழைக்கிறது. நாங்கள் அதற்கு ஸ்ரீ ஆன் என்று பெயரிட்டுள்ளோம். குறைந்தபட்ச நீர் மற்றும் அதிகபட்ச உற்பத்தி என்ற கொள்கையின் அடிப்படையில், இந்தியாவின் சூப்பர்ஃபுட் உலகளாவிய ஊட்டச்சத்து பிரச்சினையை தீர்க்கும். இந்தியா தனது சூப்பர்ஃபுட்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஐசிஏசி 2024 இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னணி தொழில் வல்லுநர்களுக்கு உலகளாவிய சகாக்களுடன் தங்கள் பணி மற்றும் கட்டமைப்பை முன்வைக்க ஒரு தளமாக இந்த மாநாடு கருதப்படுகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் டிஜிட்டல் விவசாயம் மற்றும் நிலையான வேளாண்-உணவு அமைப்புகளில் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய முன்னேற்றங்கள் இந்த மாநாட்டில் விவரிக்கப்படும். இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory