» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்: ராகுல் காந்தி
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 4:44:39 PM (IST)
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட நிலையில், இன்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
இதனிடையே செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது: நேற்றுமுதல் நான் இங்கு இருக்கிறேன், மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. இன்று நாங்கள் பஞ்சாயத்து மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது, பலி எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்பதையும், எத்தனை வீடுகள் சேதமடைந்திருக்கும் என்பதையும், அவர்களது கருத்துகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
நாங்கள் இங்கிருந்து தேவையான உதவிகளை செய்துதரத் தயாராக இருக்கிறோம். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் விருப்பப்படுகிறது. கேரள மாநிலம் இதுபோன்ற பெரிய சோகத்தைக் கண்டதில்லை. இந்த சம்பவம் குறித்து தில்லியிலும், இங்குள்ள முதல்வரிடம் பேசுவேன். இது மாறுபட்ட நிலையிலான சோகம், இதை வேறுவிதமாகதான் அணுக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.