» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிபிசி ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு மாணவர்கள் .. கல்வீச்சு.. பரபரப்பு!!

புதன் 25, ஜனவரி 2023 10:37:57 AM (IST)



மத்திய அரசு தடை விதித்துள்ள பிபிசி ஆவணப்படத்தை ஜேஎன்யு மாணவர்கள் திரையிட முயன்றபோது, அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிட்டனைச் சோ்ந்த பிபிசி செய்தி நிறுவனம், குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அந்த மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடி குறித்த ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற சா்ச்சைக்குரிய ஆவணப் படத்தை கடந்த வாரம் வெளியிட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இந்தப் படத்தை திரையிட்டு வருகின்றனர். இந்நிலையில், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு பிபிசியின் ஆவணப் படத்தை திரையிட அகில இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்தது. இதற்கான நோட்டீஸ்களும் பல்கலைக்கழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் வழங்கினர்.

இந்த ஆவணப்படத்தை திரையிட பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவ சங்கத்தினர் முறையான அனுமதி பெறவில்லை என்றும், ஆவணப்படம் திரையிடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலை. நிர்வாகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.இருப்பினும், நேற்று இரவு ஆவணப் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களின் கைப்பேசிகளில் பிபிசி ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.அப்போது, மாணவர்கள் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், பல்கலைக்கழக தரப்பில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் மின்கம்பியில் பிரச்னை என்றும், பொறியாளர்கள் குழுவினர் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி குறித்த சர்ச்சை ஆவணப் படத்தை திரையிடும்போது மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் ஜேஎன்யு வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory