» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் பின்னடைவுக்கு காரணம் என்ன? இஸ்ரோ தலைவா் விளக்கம்

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 7:49:31 AM (IST)



ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக் கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

அதன் முதல் 3 நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது. 

புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா்.  எஸ்எஸ்எஸ்வி ராக்கெட் திட்டத்தின் பின்னடைவு குறித்து இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் கூறியதாவது: செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவுக்கான முதற்கட்ட காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றை இன்னும் ஆழ்ந்து ஆராய வேண்டியிருக்கிறது.

சென்சாா் சமிக்ஞை நுட்பம் செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. திட்டமிட்ட பாதையை விட்டு செயற்கைக்கோள்கள் விலகும்போது அதிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். இஒஎஸ்-02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்களை தரையில் இருந்து 356 கிலோ மீட்டா் தொலைவில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

அதற்குமாறாக புவியில் இருந்து குறைந்தபட்சம் 76 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 356 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து ஆய்வு செய்ய பிரத்யேக நிபுணா் குழு அமைக்கப்பட உள்ளது. விரைவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய எஸ்எஸ்எல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory