» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்? அதிர்ச்சி தகவல்

திங்கள் 25, அக்டோபர் 2021 12:49:58 PM (IST)

போதைப்பொருள் வழக்கில்  ஷாருக்கான் மகனை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக தனிநபர் சாட்சியம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மறுநாள் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் பொது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

இவர் இந்த வழக்கின் மற்றொரு சாட்சியான கோசாவி என்பவரின் மெய்க்காவலர் ஆவார். கப்பலில் சோதனை நடந்த இரவில் இருவரும் அங்கே இருந்துள்ளனர். பின்னர் கோசாவி, டிசோசா என்பவரை சந்தித்து உள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கோசாவி, டிசோசாவிடம் போனில் பேசும்போது, ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ஷாருக்கான் தரப்பிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும், டிசோசாவிடம் கோசாவி கூறியதை தான் கேட்டதாக சாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் ரூ.8 கோடி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்படும் என அவர் கூறியதாகவும் சாயில் கூறியுள்ளார். இவரது தலைமையிலான குழுவினர்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மும்பை அரசு வட்டாரங்களிலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏற்கனவே சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது போலி சோதனை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரபாகர் சாயிலின் இந்த புகார் இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். குறிப்பாக சமீர் வான்கடே தரப்பில் கடுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் இருப்பதால் இது குறித்து தனக்கு தெரிந்த விவரங்களை சாயில் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் முத்தா அசோக் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இதற்கிடையே ஆர்யன் கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

kumarOct 25, 2021 - 04:14:31 PM | Posted IP 162.1*****

valakkai thisai thiruppa ella nadagamum poduvargal panam padiathavargal...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory