» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசி

திங்கள் 1, மார்ச் 2021 11:00:48 AM (IST)பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1 ) காலையில் கரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார்.  

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தினர். பிரதமருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், கரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி பேசுகையில், "கோவிட் 19 தொற்றுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நான் பெற்றுக்கொண்டேன். 

கரோனாவுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எவ்வளவு சீக்கிரம் நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தடுப்பூசியைப் பெறத் தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேசத்தை கரோனா இல்லாத தேசமாக உருவாக்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா தடுப்பூசி வழங்கினார். தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் ஊசி தனக்கு வலியை ஏற்படுத்தவில்லை என்று கூறியதாகவும் தான் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று வினவியதாகவும் கூறினார்.

இன்று தொடக்கம்:

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக இன்று மார்ர் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோய், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், மிதமான மற்றும் தீவிரமான இதய நோய் இருப்போர், சிறுநீரக நோய் இருப்போர், 2 ஆண்டுகளாக தீவிரமான சுவாசம் தொடர்பான நோய்கள் இருப்போர் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், ஹெச்ஐவி தொற்று உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தடுப்பூசி பெற விரும்புவோர், ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் மக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThalir Products


Black Forest CakesThoothukudi Business Directory