» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-51 விண்ணில் பாய்ந்தது : இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரேசில் அமைச்சர் புகழாரம்

திங்கள் 1, மார்ச் 2021 10:39:31 AM (IST)


பிரேசில் நாட்டின் செயற்கைகோள் உள்பட 19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற பிரேசில் அமைச்சர், இந்திய விஞ்ஞானிகளுக்குபுகழாரம் சூட்டினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தற்போது எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற புதிய வகையான, எடை குறைந்த ராக்கெட்டையும் தயாரித்து வருகிறது. அதன் மூலம், பூமி கண்காணிப்பு, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல்தொடர்பு மற்றும் வானிலை, காலநிலை மாற்றத்தை துல்லியமாக கணக்கிடுவது மற்றும் ராணுவ பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த 637 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1 என்ற பிரதான செயற்கைகோளுடன், இந்தியாவைச் சேர்ந்த 18 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. அமசோனியா-1 செயற்கைகோள், அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கும், பிரேசில் நாட்டில் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், பயனாளிகளுக்கு தொலையுணர்வு தரவுகளை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 25 மணி 30 நிமிட நேர கவுண்ட்டவுனை முடித்து, 19 செயற்கைகோள்களையும் சுமந்துகொண்டு நேற்று காலை 10.24 மணிக்கு தீப்பிழம்பை கக்கியபடி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அந்த ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 23 வினாடிகளில் பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில், திட்டமிட்ட இலக்கில் அமசோனியா-1 பிரதான செயற்கைகோளை நிலைநிறுத்தியது. தொடர்ந்து 1 மணி நேரம் 38 நிமிட பயணத்துக்கு பிறகு மீதம் உள்ள 18 செயற்கைகோள்களையும் அவற்றுக்குரிய இலக்குகளில் நிலைநிறுத்தியது. பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலையில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும்.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ரோ தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறை அமைச்சர் மார்கோஸ் சீசர் போன்டஸ் நேரில் பங்கேற்று, இந்திய விஞ்ஞானிகளுக்கு புகழாரம் சூட்டினார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களும், பொதுமக்கள் அவர்களுக்கான கேலரியிலும் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படாததால் அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்திய-அமெரிக்க செயற்கைகோள்கள்

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்திய ராக்கெட்டுகளில் பி.எஸ்.எல்.வி. சி-51 வித்தியாசமானதாகும். இது, இஸ்ரோ இந்த ஆண்டு ஏவும் முதல் ராக்கெட். இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டின் அமசோனியா-1 முதன்மை செயற்கைகோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்திய உடன் ராக்கெட் என்ஜின் நிறுத்தப்பட்டது. பின்னர், மீதம் உள்ள 18 செயற்கைகோள்களை அவற்றுக்குரிய இடங்களில் நிலைநிறுத்துவதற்காக ராக்கெட்டின் திசையை திருப்பி, மீண்டும் என்ஜின் இயக்கப்பட்டது. முதன்மை செயற்கைகோளை நிலைநிறுத்திய பிறகு மற்ற 18 செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளில் நீண்ட தூரம் பயணித்தவற்றில் இதுவும் ஒன்று. அதாவது 1 மணி நேரம் 55 நிமிடம் பயணித்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சேர்ந்த ஜெ.ஐ.டி. சாட், ஜி.எச்.ஆர்.சி.இ. சாட், ஸ்ரீசக்தி சாட் ஆகிய 3 செயற்கைகோள்களுடன் ஸ்பேஸ்கிட்ஸ் செயற்கைகோளான சதீஷ் தவான் சாட் உள்ளிட்ட 4 செயற்கைகோள்கள் மற்றும் இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வணிக ரீதியிலான செயற்கைகோள்கள், தகவல்தொடர்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு உதவும் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா ஒன்று வீதம் மொத்தம் 19 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

செயற்கைகோளில் பகவத் கீதை, பிரதமர் மோடி படம்

கதிர்வீச்சு நிலை, விண்வெளி வானிலை மற்றும் நீண்டதூர தொடர்பு தொழில்நுட்பங்களை அறிவதற்காக ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனம் தயாரித்த நானோ என்ற சிறிய வகையிலான சதீஷ் தவான் சாட் என்ற செயற்கைகோளும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோளின் மேல்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர், படம் பொறிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மெமரி கார்டில் பதிவு செய்யப்பட்ட பகவத் கீதை வாசகங்களும் செயற்கைகோளில் இடம்பெற்றுள்ளன. மேலும், விண்வெளித்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த 24 ஆயிரம் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆயிரம் வெளிநாட்டினரின் பெயர்களும் மின்னணு வடிவில் செயற்கைகோளில் அனுப்பப்பட்டு உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory