» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை

சனி 7, டிசம்பர் 2019 12:16:27 PM (IST)

நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டையும், புதிய பாஸ்போர்ட் வேண்டி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது குழந்தை கடத்தல் புகார் எழுந்ததை தொடர்ந்து ஆகமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்குள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீசார் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து,நித்தியானந்தா மீது கடத்தல் பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். எனவே, குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார், நித்தியானந்தாவை தேடி வந்தனர். நித்யானந்தா மற்றும் அவரது ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குஜராத் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்கி அதை கைலாசா எனும் தனி நாடாக நித்தியானந்தா பிரகடனப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவ்வப்போது நித்தியானந்தா வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நித்தியானந்தா தங்கள் நாட்டின் தீவு எதையும் வாங்கவில்லை என்றும், அவர் ஹைதி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் ஈகுவடார் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் நித்தியானந்தா தன்னை அகதியாக ஏற்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் அரசு மறுத்து விட்டதாகவும் அந்நாட்டு தூதரகம் கூறியுள்ளது. இனி நித்தியானந்தா தொடர்பான செய்திகளில் ஈகுவேடார் நாட்டை எந்த ஊடகமும் குறிப்பிடக்கூடாது என ஈகுவேடார் அரசு சார்பில் வலியுறுத்தியுள்ளதப்பட்டுள்ளது.

இந்நிலையில், நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டையும், புதிய பாஸ்போர்ட் வேண்டி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை வெளிநாட்டு தூதரகங்களின் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது என ரவீஷ் குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory