» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிடுகிறது? பிரதமர் மோடி கேள்வி

சனி 19, அக்டோபர் 2019 8:16:55 AM (IST)

பாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிட்டு வருகிறது.  இந்திய மக்களுக்கு பிடித்த வகையில் பேசுவதற்கு காங்கிரஸ் தைரியத்தை வரவழைத்து கொள்ள வேண்டும்  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் விவரம் : காங்கிரஸ் கட்சியால் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. ராணுவ வீரர்களின் தியாகத்தை மதிக்க தெரியாது. நான் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். தேச நலன் அடிப்படையில் முடிவெடுக்கட்டுமா வேண்டாமா ? தேச நலன் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமா, இல்லையா ?

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி என்ன நடந்தது என உங்களுக்கு ஞாபகம் உள்ளதா ? அன்று யாரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது. இந்தியாவின் அரசியலைமைப்பு விதிகள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற நிலை உருவானது. கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த தற்காலிகமான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. மத்திய அரசு சட்டப்பிரிவு 370 -ஐ ரத்து செய்தது முதல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் வலியால் துடித்து கொண்டிருக்கின்றன. அவர்களின் வலிக்கு எந்த மருந்தும் கிடையாது.

தூய்மை இந்தியா, சர்ஜ்ஜிகல் தாக்குதல், பாலகோட் ஆகிய பெயர்களை கேட்டால் அந்த கட்சிகளின் வலி அதிகரித்துவிடுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பாக காங்கிரஸ் பேசுவதையெல்லாம் பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. அதனால் உண்மையில் யாருக்காக காங்கிரஸ் இப்படி வலியால் துடிக்கிறது என்பதை இப்போது நாட்டு மக்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். பாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிட்டு வருகிறது.  இந்திய மக்களுக்கு பிடித்த வகையில் பேசுவதற்கு காங்கிரஸ் தைரியத்தை வரவழைத்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் இடையே என்ன உறவு உள்ளது என நீங்கள் தான் இந்த தேர்தலில் கண்டுபிடிக்க வேண்டும். மோடிக்கு எதிராக காங்கிரஸ் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம். 

என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் கூறலாம், பொய்களை அடுக்கலாம். அதற்காக நான் பயப்பட போவதில்லை. என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் நம் தாய்நாடு பற்றி அவதூறாக எதுவும் கூற வேண்டாம். நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முறை தவறிப் பேச வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு தேச ஒற்றுமை குறித்தோ பாபா சாகேப் அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பு குறித்தோ எந்த கவலையும் இல்லை. நம் தேசத்திற்கும் அரசியலமைப்புக்கும் மரியாதை கொடுக்க தவறியவர்களை ஹரியானா மக்கள் தண்டிக்காமல் விடலாமா? காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்கள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் என யாரும் பாதுகாப்பாக இல்லை. விளையாட்டுத்துறை, விவசாயம் ஆகிய அனைத்திலும் காங்கிரஸ் ஊழல் செய்து வந்தது.

நாட்டை சீர்குலைத்த காங்கிரஸ் கட்சிக்காரர்களை மூட்டை கட்டி சொந்த ஊருக்கு திரும்பி அங்கே அமைதியாக வாழும்படி கூறுங்கள் என பிரதமர் மோடி கூறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் ஹரியானா முதல்வர் லால் மனோகர் கட்டாரின் 5 வருட ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory