» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பங்கேற்பு!!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 10:59:47 AM (IST)காஷ்மீரில் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தி.மு.க. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சிகள் பங்கேற்றன. 

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சகத் லோன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிணங்க டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்துக்கு மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கார்த்திக் ப.சிதம்பரம் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகரத், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களாகிய நாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்கிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஆகவே, வீட்டு சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மக்களின் பேச்சுரிமையை பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உற்றார் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாகிய நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory