» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

திங்கள் 22, ஜூலை 2019 5:22:29 PM (IST)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை இன்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. ஆனால், அன்று அதிகாலை பிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், ஜூலை 22ம் தேதி (இன்று) பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.இந்த சந்திரயான்-2 விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர்.

சந்திராயன் 2 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் கிரயோஜெனிக் படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன. பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது.

திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு சரியாக 16 நிமிடங்களில் 3,850 கிலோ எடைக்கொண்ட சந்திரயான் 2 விண்கலம், புவிவட்டப் பாதையை சென்றடைந்தது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன், இதர விஞ்ஞானிகளை ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு

விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சிவன், ”சந்திரயான்-2 விண்கலம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருந்தது. அடுத்த ஒன்றரை மாதங்கள் இஸ்ரோவுக்கு சிக்கலான மாதமாக இருக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால் மிகச் சவாலான பணியை செய்துள்ளோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பால்தான் இது சாத்தியமானது. மிகத் தீவிரமான பிரச்னையை கடைசி நேரத்தில் கண்டறிந்து சந்திரயான்-2 விண்கலம் ஏவும் பணியை கடந்த வாரம் நிறுத்தினோம்.

நிலவின் தென் பகுதியில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறங்குவதுதான் நமது அடுத்த இலக்கு. வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் தலைவணங்குகிறேன். இதுவரை நிலவு குறித்து தெரியாத விஷயங்கள் கூட சந்திரயான்-2 மூலமாகத் தெரியவரும். 15 முக்கியமான பணிகளைத் தொடர்ந்து நிலவின் தென் துருவதில் ஆய்வுக் கலத்தை தரையிறங்குவதற்கான பணிகளை செய்வோம்” சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory