» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

வெள்ளி 12, ஜூலை 2019 3:18:57 PM (IST)

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழலில், சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்திருந்தன. இதன் தொடர் நடவடிக்கையாக, மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு இடையே அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13, மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜினாமா செய்து பேரவைத் தலைவரிடம் கடிதங்களை கொடுத்துள்ளனர். 

இதனிடையே, அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுக்கொண்டதோடு, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நடவடிக்கை எடுக்காததால், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. 

கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை முன்வைத்து பெங்களூரு விதானசெளதாவில் புதன்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தினர். 

ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய மஜத,காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டணி அரசு கவிழும் எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு பேரவைத் தலைவரின் நடவடிக்கை வருத்தத்தை அளித்துள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி பெங்களூரில் இன்று கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவைக் கூடியதும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர பாஜக ஆட்சேபனை தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்கு முன்னதாக, அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாவும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் குழப்பங்களைக் கவனித்துவரும் பொதுமக்கள், சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில், ஜூலை 26-ஆம் தேதிவரை 11 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருக்கும் சட்டப்பேரவைக்கூட்டம் நடக்குமா? என்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory