» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி: அமித்ஷா, உத்தவ் தாக்கரே அறிவிப்பு

செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:55:42 PM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கூட்டாக அறிவித்தனர்.

இந்துத்வா கொள்கை அடிப்படையில் நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா ஆரம்ப காலம் முதல் தேர்தல்களை கூட்டணி வைத்தே சந்தித்து வந்தன. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாகவே சந்தித்தன. தேர்தலையடுத்து மோடி அரசில் சிவசேனாவுக்கும் மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் அதே ஆண்டு இறுதியில் நடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக இரு கட்சிகளும் கூட்டணியை முறித்து கொண்டன. தனித்து போட்டியிட்டதில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வென்றது. ஆனால் ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தனித்து ஆட்சியமைத்தது. பா.ஜனதா தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். இதையடுத்து சிவசேனாவும் பா.ஜனதா தலைமையிலான அரசில் தன்னை இணைத்து கொண்டது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு போட்டு கொண்டபோதிலும், இருகட்சிகளுக்கும் இடையே சுமுக உறவு ஏற்படவில்லை. தொடர்ந்து எதிர்க்கட்சியை போல பா.ஜனதாவின் செயல்பாடுகளை சிவசேனா விமர்சித்து வந்தது. இனி வரும் தேர்தல்களில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, தேர்தலை தனித்து சந்திக்க தயாராகுமாறு மராட்டிய கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தினார். இதன்மூலம் இரு கட்சிகளும் மீண்டும் தேர்தல் கூட்டணி வைப்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த 14-ந் தேதி முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது ‘மாதோ’ இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை பா.ஜனதா தலைவர் அமித்ஷா மும்பை வந்தார். அவர் மாதோ இல்லத்திற்கு சென்று உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். பின்னர் அவர்கள் ஒர்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அங்கு அமித்ஷா, உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் எங்களது கட்சிக்கும், சிவசேனாவுக்கும் சுமுக உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளையும் பகிர்ந்து கொண்டு போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டோம். அதன்படி சட்டமன்ற தேர்தலில் இருகட்சிகளும் சரிசமமாக தொகுதிகளை பகிர்ந்து கொண்டு போட்டியிடும். மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்த கூட்டணி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா கூறுகையில், "சிவசேனா எங்களது பழமையான கூட்டணி கட்சி. கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று இரு கட்சி தொண்டர்களும் விரும்பினர். அதன்படி இணைந்து உள்ளோம். மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் எங்களது கூட்டணி 45 இடங்களில் வெற்றி பெறும்” என்றார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது இருகட்சிகளுக்கும் பொதுவானது. அது விரைவில் கட்டப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக 2-வது பெரிய மாநிலமாக மராட்டியம் விளங்குவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

சாமிFeb 19, 2019 - 05:39:54 PM | Posted IP 172.6*****

சிறப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory