» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 9:11:47 AM (IST)

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக  உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. யானைகளின்  வழித்தடங்களாக மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம்,  பொக்காபுரம் போன்ற பகுதிகள் இருந்து வருகின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ், ரிசார்ட்டுகள் உள்ளன. பெரும்பாலான ரிசார்ட், நில உரிமையாளர்கள் வன விலங்குகள் தங்கள் நிலங்களுக்குள்  நுழையாமல் இருக்க தடுப்பு சுவர்கள், முள் வேலிகள் மற்றும் மின் வேலிகளை அமைத்திருந்தனர். 

இதனால், யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு யானைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர  முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை வக்கீல் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மசினக்குடி சுற்று பகுதிகளில் யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளன. எனவே,  அப்பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் விவசாயிகளை அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் கமிட்டியை நியமித்து பொதுமக்களின் ஆட்சேபனைகளை கேட்க உத்தரவிட்டது. இதையடுத்து, 2010ல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சென்னை உயர்  நீதிமன்றம் அமைத்த கமிட்டி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றது. பின் யானைகள் வழித்தடம் தொடர்பான வரைபடம் வெளியிடப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக யானைகள் வழித்தட பகுதிகளில் உள்ள காட்டேஜ்,  ரிசார்ட்டுக்களின் வேலிகள் மட்டுமே அகற்றப்பட்டன. கட்டிடங்கள் ஏதும் அகற்றப்படவில்லை. இதையடுத்து, பலரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகூர், அப்துல் நசீர்,  தீபக் குப்தா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மசினகுடி மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் யானை வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில்  விதிமுறைகளை மீறி  கட்டப்பட்டுள்ள 27 கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம்  மூடி சீல் வைக்க வேண்டும். மேலும், 300க்கும் மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனுமதி பெற்றிருந்தால்,  அதற்கான ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் (நேற்று முதல்) மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் அனுமதி பெற்றதற்கான சான்றுகள் அளிக்காவிட்டால் கட்டிடங்களை அகற்ற வேண்டும்’  என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory