» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 12:36:24 PM (IST)

ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அப்போது 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டைக் கூட நிரூபிக்க முடியாமல் அரசு தரப்பு தோல்வியடைந்து விட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. சுமார் 11 ஆண்டு காலம் நடந்து வந்த விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான சாட்சிகளை அளிக்க தவறிவிட்டதாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்ளும் பணியை தொடங்கிவிட்டன.

மெக்கா மசூதியில் கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 9 பேர் பலியாகினர். மேலும் 58 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வெடிக்காத நிலையில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஹைதராபாதில் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 பேர் பலியாகினர். முதலில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன்பிறகு சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. பின்னர், என்ஐஏ அமைப்பு விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சுவாமி அஸிமானந்த், பரத் மோகன்லால் ரதேஷ்வர், ராஜேந்திர சௌதரி, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் 226 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 411 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, ஹைதராபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. ரவீந்தர் ரெட்டி தனது தீர்ப்பை நேற்று வெளியிட்டார். அப்போது அவர், சுவாமி அஸிமானந்த், பரத் மோகன்லால் ரதேஷ்வர், ராஜேந்திர சௌதரி, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா ஆகிய 5 பேருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் அரசு தரப்பு தோல்வியடைந்து விட்டது; ஆதலால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன் என்றார். 

இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் பேசியபோது, அஸிமானந்த் தரப்பு வழக்குரைஞர் ஜே.பி. ஷர்மா தெரிவித்தார். இந்த வழக்கில், தானும், மேலும் சிலரும் இணைந்து மெக்கா மசூதியில் குண்டு வைத்ததாக முதலில் வாக்குமூலம் அளித்த முக்கியக் குற்றவாளி அஸீமானந்த், சில மாத விசாரணைக்குப் பிறகு, தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டார். விசாரணைக் குழுவின் வற்புறுத்தலால்தான் அப்படி வாக்குமூலம் அளித்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அவர் அளித்த வாக்குமூலமும், சாட்சிகளும் எந்த வகையிலும் பொருந்தவில்லை. எனவே, அந்த சாட்சிகளை ஏற்க நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் பாரத் மோஹன்லால் ரதேஷ்வர் என்கிறது பாரத் பாய். சம்பவம் நடந்து முதல் 6 ஆண்டுகளில் இவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால், பஞ்குலா வழக்கில் இவர் போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், இவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய புலனாய்வு அமைப்பின் வளையத்துக்குள் வருவோர், ஒன்று குற்றவாளியாக்கப்படுவர் அல்லது சாட்சிகளாக மாற்றப்படுவர். அவர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்படும் என்கிறார் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி வாதாடி வழக்குரைஞர் ஷர்மா.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏராளமான சாட்சிகளையும், ஆவணங்களையும் தேசிய புலனாய்வு ஆணையம் புனைந்தது. ஆனால் எதையும் ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது குறித்து என்ஐஏ அதிகாரி அலோக் மிட்டலிடம் கேட்டதற்கு, நீதிமன்ற தீர்ப்பின் இறுதி அறிக்கை வந்த பிறகு அதனை ஆய்வு செய்து அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்றார். முன்னதாக, இந்த வழக்கில் 10 பேர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சந்தீப் வி டாங்கே, ராமச்சந்திர கல்சாங்க்ரா ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். சுனில் ஜோஷி என்பவர் கொலை செய்யப்பட்டு விட்டார். எஞ்சிய 2 பேர் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

குற்றப்பத்திரிகையில் கூறப்பட்ட தகவலின்படி, குண்டு வெடிப்பு குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் சந்தித்துப் பேசியதற்கோ, செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. அதே போல, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜேந்தர் சௌதாரி, தேஜாராம் பார்மர் ஆகியோர்தான் மசூதியில் குண்டு வைத்தவர்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்களுக்கு எதிராக ஒரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. தேஜாராமுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. ஏன் என்றால், அவருக்கு எதிராக ஒரு சாட்சியமும் இல்லை என்பதே காரணம்.

இந்த தீர்ப்பின் மூலம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள் என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியமும் இல்லை என்றால், மசூதியில் குண்டு வைத்தவர்கள் யார்? குற்றவாளிகள் உண்மையிலேயே கண்டுபிடிக்கப்படவில்லையா? குற்றவாளிகளைக் கண்டுபிடித்தும் அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லையா? இத்தனை கேள்விக்கும் என்ஐஏ பதில் சொல்லுமா? வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த், ரதேஷ்வர் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே இருந்தனர். எஞ்சிய 3 பேர், ஹைதராபாத் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


CSC Computer EducationThoothukudi Business Directory